Wednesday, February 2, 2011

பழமையும் புதுமையும்

மொழி பேதமில்லை
கவிஞர்கள் பல...
கவிதைகள் பல...
கற்பனைகள் பல...
கருத்துக்கள் பல...
சொற்கோர்வை பல...
இன்றும்
கவிஞர்கள் பல, கவிதைகள் பல.
கற்பனை பழையது, கருத்துக்களும் பழையது.
சொற்கோர்வை மட்டுமே புதியது.

கே.வி. நிக்சன்.

கவிதை

கவிதை-அது
ஆத்மாவின் சங்கீதம்.
தன்னுள் தன்னை தேடுகிற போது,
மனம் மவுனமாகிறது.
ஞானம் பிறக்கிறது.
மனிதனே-நீயே
ஒரு மகத்தான (க)விதை.

கே.வி.நிக்சன்.

Monday, January 24, 2011

இனி காதல் எனக்கு இல்லை

அது காலை நேரம்
ஜன்னல் ஓரத்தில் நான்
சீராக விழுந்து கொண்டிருந்தது சாரல்...

மனதுக்குள் நினைவலைகள்
அன்று-இதே சாரல் காலத்தில்
ஜன்னல் ஓரத்தில் நான்-அருகில் நீ

இன்று-நான் தனிமையில்.

காலங்கள் ஓடுகின்றன...
நினைவுகளும் கூடவே ஓடுகின்றன
இதுதான் வாழ்க்கை

நான் எழுதிய கவிதை
பாதியில் முடிந்தது
தொடரும் என நினைத்த உறவு-அப்படியே

தொலைந்தது தெரியாமலேயே-தேடுகிறேன்.

என் மனம் கேட்கிறது
இனியும் ஒரு துணை தேவையா?
ஆம். அது முடிந்து போனது

இனி காதல் எனக்கு இல்லை.

கே.வி. நிக்சன்.

Thursday, January 20, 2011

பெரியவீட்டுக்காரர் என்ன சாதி?


கையடக்க எந்திரதை கொண்டு சவரம் செய்து கொண்டிருந்த பெரியவீட்டுக்காரரை வணங்கினேன். நான் கல்லூரி படிப்பை முடிக்க உதவி செய்த அவரை பார்த்து நன்றி சொல்லி வருமாறு தந்தை கூறியதால் அங்கு சென்றேன். பெரியவீட்டுக்காரர் என்ற பெயருக்கு பொருத்தமாக அவரது வீடும் பெரிதாக இருந்தது. அனைத்து வகையான ஆடம்பர வசதிகளும் அங்கு இருப்பதை என்னால் உணர முடிந்தது. 'வாப்பா படிப்பு முடிந்ததா?' என்றார். "நல்லபடியா முடிந்ததுங்க" என்றேன். அப்புறம் என்ன, வேலை? தொழிலா? என்றபடி என்னை வீட்டுக்குள் அழைத்து சென்றார். எதுவாக இருந்தாலும் நேர்மையானதா, நல்ல சம்பாத்திப்பதாக இருக்கனும் என்றேன். நேர்மையும் சம்பாத்தியமும் அவசியம்தான், ஆனால் அதவச்சி வசதியாக வாழ்னும், அதுதான் முக்கியம் என சொன்னவர், அவர் வீட்டில் இருந்த சாமி அறை முதல் கழிவறை முதல் எனக்கு சுற்றி காட்டினார்.
சாமி அறையில் பெரியவீட்டு அம்மா பூஜை செய்து கொண்டிருந்தார். சமையலறையில் வேலைக்கார பெண், மின்னணு பொருட்களின் உதவியோடு அலுப்பின்றி சமைத்துக் கொண்டிருந்தார். துணிகளை சலவை செய்ய எந்திரம், கழிவறையில் மேல்நாட்டு தொழில்நுட்பம், கேளிக்கை வசதிகளுடன் கூடிய தனி அறை, வரவு-செலவை கணக்கிட கணினி, நூலகம், வீட்டுக்கு வெளியே பச்சை புல்வெளியுடன் பல வகை, பழ வகை மரங்கள். வசதின்னா இப்படி இருக்கனும் என பெருமிதத்துடன் என்னை பார்த்து கூறினார். அவருக்கு நன்றி சொன்னேன். என் வீட்டுக்கு கிளம்பினேன்.
வழியில் எனக்குள் ஒரு குழப்பம். அறிவியல் உலகத்தில் இன்னுமா இது இருக்கிறது? விஞ்ஞானத்தை பயன்படுத்துகிறார்கள், ஏன் ஞானத்தை பயன்படுத்த தவறுகிறார்கள். எனக்குள் பல கேள்விகள், சமுதாயத்தை நினைத்து சில நெருடல்கள். வீட்டுக்கு வந்ததும் தந்தையை பார்த்து கேட்டேன் '' அப்பா, பெரியவீட்டுக்காரர் என்ன சாதி? சவரத்தொழிலாளியா, பூசாரியா, நலபாகரா, துப்புரவு தொழிலாளியா, கூத்தாடியா, பண்டிதரா அல்லது விவசாயியா? எல்லா தொழிலும் அவர் வீட்டுக்குள் இருக்கிறது, எல்லா தொழிலையும் அவரும் செய்கிறார். தொழில் அடிப்படையில்தானே சாதி உருவானது. அப்படின்னா பெரியவீட்டுக்காரர் என்ன சாதி?'' என் கேள்விக்கு தந்தை பதில் சொல்லவில்லை, அவருக்கு என் கேள்வி புரியவில்லை என நினைக்கிறேன். ஆனால் என் கேள்வியில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இந்த கேள்விக்கு அனைவரும் விடை தேட முயற்சித்தால், சாதிக்கு முடிவு கட்டிவிடலாம்...
-கே.வி. நிக்சன்.

Saturday, September 25, 2010

எல்லாமே ஒன்று


காட்டு பாதையில்-நீ
ஒற்றை மலர்
ஆழ்கடல் பயணத்தில்-நீ
ஒற்றை முத்து
இரவு வேளையில்-நீ
ஒற்றை நட்சத்திரம்
பசுமை கால மரக்கிளையில்-நீ
ஒற்றை இலை
மழை கால வானில்-நீ
ஒற்றை கார்மேகம்
வானவில் வண்ணங்களில்-நீ
ஒற்றை நிறம்
சுற்றி வரும் பூகோலத்தில்-நீ
ஒற்றை திசை
தமிழ் சொற்களில்-நீ
ஒற்றை எழுத்து
-இந்த புலம்பலில்
'நீ' மட்டுமே உண்மை.

-கே.வி. நிக்சன்.

Saturday, September 18, 2010

நோய் அல்ல ஊட்டச்சத்து


தூக்கம் வராது என்பார்கள்-ஆனால்
நீ கனவில் வரும் தருணத்துக்காக ஏங்கி-நன்றாக தூங்குகிறேன்.
மறதி ஏற்படும் என்பார்கள்-ஆனால்
உன் தேன்மொழி வார்த்தைகளின் முதல் சொல்-இன்றும் என் நினைவில்...
பசி எடுக்காது என்பார்கள்-ஆனால்
உன் கை கோர்த்து வெகுதூரம் நடந்தால்-நன்றாக பசிக்கிறது.
பார்ப்பதெல்லாம் அவள் என்பார்கள்-ஆனால்
உன்னை மட்டும் அடையாளம் காணும் எனக்கு-மற்றவை மற்றவையே.
இதுவரை கனவுலகில் இருந்த நான்-இப்போது
உணர்வுலகுக்கு வந்துவிட்டேன், உன் காதலை உணர்கிறேன்.
காதல் நோயல்ல- அது ஊட்டச்சத்து.
-கே.வி. நிக்சன்.

Wednesday, August 11, 2010

நானும் பெரியவன்...


ஆருயிர் நண்பனை வரவேற்க
இலக்கண விதியை மீறினான்-கண்ணன்!!

தந்தையின் சபதத்தை நிறைவேற்ற
கொலை களம் புகுந்தான்-பரசுராமன்!!

அருமை தங்கையை சமாதானப்படுத்த
மானுட தர்மத்தை மீறினான்-ராவணன்!!

குடிவாசிகளின் சந்தேகத்தை போக்க
மனைவியை தீக்குளிக்க செய்தான்-ராமன்!!

அழகு மயிலின் துயர் துடைக்க
இயற்கை விதியை மீறினான்-பேகன்!!

இந்த வரிசையில் நானும்...

தவறு செய்பவர்களே பெரியவர்கள்!!
நானும் பெரியவன்...

-கே.வி. நிக்சன்.