Monday, February 1, 2010

நான் தாராவி...


'நான் தாராவி': ஒரு வரலாறு

என் பெயர் தாராவி. மும்பை மாநகரின் ஒரு பகுதியான நான், ஆசியவின் மிகப்பெரிய குடிசை பகுதியாக திகழ்கிறேன். மும்பையின் இருபெரும் புறநகர் ரயில் வழித்தடங்களான மத்திய மற்றும் மேற்கு ரயில்வேக்கு இடையே அமைந்துள்ள நான், மாகிம், பாந்த்ராவுக்கு மேற்கும் சயானுக்கு கிழக்கும், மாட்டுங்காவுக்கு தெற்கும் மித்தி ஆற்றுக்கு வடக்கும் உள்ள 175 ஹெக்டர் நிலத்தில் பரந்து விரிந்துள்ளேன். போர்ச்சுகீசியர்கள் என்னை ஆக்கிரமித்திருந்த போது தாரவி என்று அழைத்தனர். ஆங்கிலேயர்களோ என்னை தர்ரவ்வி, தோர்ரோவ்வி என்று அழைத்தனர்.
18ம் நூற்றாண்டில், இன்று மும்பை மாநகரமாக திகழும் பகுதிகள் அனைத்தும் சிறு, சிறு தீவுகளாக இருந்தன. அப்படிப்பட்ட தீவுகளின் ஒன்றுதான் நான். 1739ம் ஆண்டு பாஸ்சேன் மீது படையெடுத்த சிம்னாஜி அப்பா என்ற மன்னர் என்னை ஆக்கிரமிப்பு செய்தார்.
19ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை சேறும் சகதியும் புதர்களும் நிரைந்த தீவாக இருந்த நான், கோலி மீனவ மக்களின் அடைக்கல பூமியாக இருந்தேன். காலங்கள் செல்ல சேறும் சகதியும் புதர்களும் மறைந்தன. இவைகளோடு கோலி மீனவ மக்களும் என்னிடத்தில் இருந்து மெல்ல, மெல்ல மறைந்தனர்.
அதன் பின் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. விஞ்ஞான மயமாக மாறிய உலகத்தில் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் சிறு, சிறு தீவுகளாக இருந்த பகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டு பாம்பே நகரமாக உருமாறியது. நான் பாம்பே நகரின் ஒரு பகுதியானேன். குஜராத் மாநிலத்தில் இருந்து வந்து என்னிடத்தில் குடிபெயர்ந்த மக்கள் மண்பாண்டங்கள் தொழில் தொடங்கினர். மராத்தியர்கள் உள்ளே நுழைந்து தோல் பதனிடும் தொழில் செய்தனர். இவர்களை தொடர்ந்து தமிழ்நாடு, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து மக்கள் வந்து என்னிடத்தில் குடியமர்ந்தனர். இப்படியாக மக்கள் தொகையும் தொழிற்கூடங்களும் நிரைந்த சிறு நகரமாக நான் மாறினேன்.
1986ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்குபடி என்னுடைய மக்கள் தொகை 5,30,225. தற்போது இது 6 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக அதிகரித்திருக்கும் என கூறப்படுகிறது. அனைத்து வகையான தொழில்களும் இங்கு நடைபெறுகிறது. இங்கு தயாராகும் பொருட்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன. தற்போது ஆண்டுக்கு 650 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் ஈட்டும் பகுதியாக நான் மாறிவிட்டேன்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தவர்கள் என்னிடத்தில் இருந்தாலும் என்னை அதிகமாக தக்க வைத்து கொண்டவர்கள் தமிழர்கள்தான். முதல் தமிழ் பள்ளி 1924ம் ஆண்டு கட்டப்பட்டது. குடிசை பகுதி மக்கள் குறிப்பாக தமிழர்கள் நலனுக்காக பாடுபட்ட சமூக சேவகர் எம்.வி. துரைசாமி எடுத்த முயற்சிகளால் 1960ம் ஆண்டு தாராவி கூட்டுறவு வீட்டு வசதி அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருந்தவர்களின் குடிசை வீடுகள் அனைத்தும் 338 பிளாட்டுகள், 97 கடைகள் கொண்ட டாக்டர் பாலிகா நகராக மாறியது.
என்னிடத்தில் வகசிப்பவர்கள் பெரும்பாலானோர் குடிசை வீடுகளில் வசிக்கும் மக்கள். இவர்களில் தலித் இனத்தவர்கள் அதிகம். சிறுபான்மை சமூகமான கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் புத்த மதத்தினரும் இங்கு வசிக்கின்றனர். என்னிடத்தில் நடைபெறும் தொழில் மண்பாண்டம் செய்தல், தோல் பதனீடு, ஆயத்த ஆடை உற்பத்தி, கழிவு பொருட்கள் மறுசுழற்சி, சிறுதீணி தயாரிப்பு என இங்கு இல்லாத தொழில்களே இல்லை எனலாம். 15 ஆயிரம் ஒற்றை அறை தொழிற்கூடங்கள் இருக்கிறது என கூறப்படுகிறது.
என்னதான் பணம் கொழிக்கும் இடமாக நான் இருந்தாலும் பொது சுகாதாரம் இங்கு கவலைக்கிடமாகவே இருக்கிறது. கழிவுநீர் ஓடை வசதி, கழிப்பிடம் வசதி, சுத்தமான குடிநீர் வசதி இங்கு கிடையாது. இப்படிப்பட்ட என்னை பல லட்சம் கோடி செலவு செய்து தாராவி புனரமைப்பு திட்டம் என்ற பெயரில் செக்டராக பிரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கான திட்டப்பணிகள் எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியே?
போர்ச்சுகீசியர்கள், ஆங்கிலேயர்கள் என பலரை பாத்த நான், இவர்கள்(மாநில அரசு) என்னை என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பார்க்கத்தான் போகிறேன். நான்... தாராவி... காலங்களை கடந்தவன்...
கே.வி. நிக்சன்.