Thursday, April 8, 2010

சிந்துதுர்க் கோட்டை




மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களில் சிந்துதுர்க் கோட்டையும் ஒன்று. 345 ஆண்டுகள் பழமை மிக்க இந்த கோட்டை சிவாஜி மகாராஜாவால் கட்டப்பட்டது. கடலுக்கு நடுவே சிறு தீவு போல காட்சி தரும் இந்த கோட்டையை தற்போது இந்திய அகழ்வாராய்ச்சித்துறை ஆய்வு செய்து வருகிறது. இந்த கோட்டைக்குள்ளே சிவ்ராஜேஸ்வர் கோயில் என்ற பெயரில் சிவாஜி மகாராஜாவுக்கு கோயில் ஒன்று உள்ளது. மகாராஷ்டிராவுக்கு சுற்றுலா செல்பவர்கள் சிந்துதுர்க் கோட்டையை விட்டுவிடாதீர்கள்.

-கே.வி. நிக்சன்.

Wednesday, April 7, 2010

வாழ்க்கையை வாழ வேண்டும்...


யார் சொல்லி என்ன நடக்கும்

நேற்றும் இன்றும் நாளையும்-எனக்கு ஒன்றுதான்
நேற்று வாழ்ந்தேன், இன்று வாழ்கிறேன், நாளை?
எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் பக்குவம்-வாழ்க்கையையும்
நடப்பது எல்லாம் நன்மைக்கே-இல்லை
நடப்பது எல்லாம் எனக்கே-எண்ணம் வேண்டும்
நல்லது, கெட்டது இல்லை-இது என் வாழ்க்கை
எனக்கு மட்டுமே தீர்மானிக்கும் உரிமை
யார் சொல்லி என்ன நடக்கும்
மனதுக்கு சரி என்றால் செய்வேன்-எதுவாக இருந்தாலும்
சரியானது எது என்பதை தீர்மானிக்க-யோசிப்பேன் அதிகமாக
வாழ்க்கையை வாழ வேண்டும்-உயிர் போகும் வரை.

கே.வி.நிக்சன்.

Monday, February 1, 2010

நான் தாராவி...


'நான் தாராவி': ஒரு வரலாறு

என் பெயர் தாராவி. மும்பை மாநகரின் ஒரு பகுதியான நான், ஆசியவின் மிகப்பெரிய குடிசை பகுதியாக திகழ்கிறேன். மும்பையின் இருபெரும் புறநகர் ரயில் வழித்தடங்களான மத்திய மற்றும் மேற்கு ரயில்வேக்கு இடையே அமைந்துள்ள நான், மாகிம், பாந்த்ராவுக்கு மேற்கும் சயானுக்கு கிழக்கும், மாட்டுங்காவுக்கு தெற்கும் மித்தி ஆற்றுக்கு வடக்கும் உள்ள 175 ஹெக்டர் நிலத்தில் பரந்து விரிந்துள்ளேன். போர்ச்சுகீசியர்கள் என்னை ஆக்கிரமித்திருந்த போது தாரவி என்று அழைத்தனர். ஆங்கிலேயர்களோ என்னை தர்ரவ்வி, தோர்ரோவ்வி என்று அழைத்தனர்.
18ம் நூற்றாண்டில், இன்று மும்பை மாநகரமாக திகழும் பகுதிகள் அனைத்தும் சிறு, சிறு தீவுகளாக இருந்தன. அப்படிப்பட்ட தீவுகளின் ஒன்றுதான் நான். 1739ம் ஆண்டு பாஸ்சேன் மீது படையெடுத்த சிம்னாஜி அப்பா என்ற மன்னர் என்னை ஆக்கிரமிப்பு செய்தார்.
19ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை சேறும் சகதியும் புதர்களும் நிரைந்த தீவாக இருந்த நான், கோலி மீனவ மக்களின் அடைக்கல பூமியாக இருந்தேன். காலங்கள் செல்ல சேறும் சகதியும் புதர்களும் மறைந்தன. இவைகளோடு கோலி மீனவ மக்களும் என்னிடத்தில் இருந்து மெல்ல, மெல்ல மறைந்தனர்.
அதன் பின் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. விஞ்ஞான மயமாக மாறிய உலகத்தில் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் சிறு, சிறு தீவுகளாக இருந்த பகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டு பாம்பே நகரமாக உருமாறியது. நான் பாம்பே நகரின் ஒரு பகுதியானேன். குஜராத் மாநிலத்தில் இருந்து வந்து என்னிடத்தில் குடிபெயர்ந்த மக்கள் மண்பாண்டங்கள் தொழில் தொடங்கினர். மராத்தியர்கள் உள்ளே நுழைந்து தோல் பதனிடும் தொழில் செய்தனர். இவர்களை தொடர்ந்து தமிழ்நாடு, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து மக்கள் வந்து என்னிடத்தில் குடியமர்ந்தனர். இப்படியாக மக்கள் தொகையும் தொழிற்கூடங்களும் நிரைந்த சிறு நகரமாக நான் மாறினேன்.
1986ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்குபடி என்னுடைய மக்கள் தொகை 5,30,225. தற்போது இது 6 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக அதிகரித்திருக்கும் என கூறப்படுகிறது. அனைத்து வகையான தொழில்களும் இங்கு நடைபெறுகிறது. இங்கு தயாராகும் பொருட்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன. தற்போது ஆண்டுக்கு 650 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் ஈட்டும் பகுதியாக நான் மாறிவிட்டேன்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தவர்கள் என்னிடத்தில் இருந்தாலும் என்னை அதிகமாக தக்க வைத்து கொண்டவர்கள் தமிழர்கள்தான். முதல் தமிழ் பள்ளி 1924ம் ஆண்டு கட்டப்பட்டது. குடிசை பகுதி மக்கள் குறிப்பாக தமிழர்கள் நலனுக்காக பாடுபட்ட சமூக சேவகர் எம்.வி. துரைசாமி எடுத்த முயற்சிகளால் 1960ம் ஆண்டு தாராவி கூட்டுறவு வீட்டு வசதி அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருந்தவர்களின் குடிசை வீடுகள் அனைத்தும் 338 பிளாட்டுகள், 97 கடைகள் கொண்ட டாக்டர் பாலிகா நகராக மாறியது.
என்னிடத்தில் வகசிப்பவர்கள் பெரும்பாலானோர் குடிசை வீடுகளில் வசிக்கும் மக்கள். இவர்களில் தலித் இனத்தவர்கள் அதிகம். சிறுபான்மை சமூகமான கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் புத்த மதத்தினரும் இங்கு வசிக்கின்றனர். என்னிடத்தில் நடைபெறும் தொழில் மண்பாண்டம் செய்தல், தோல் பதனீடு, ஆயத்த ஆடை உற்பத்தி, கழிவு பொருட்கள் மறுசுழற்சி, சிறுதீணி தயாரிப்பு என இங்கு இல்லாத தொழில்களே இல்லை எனலாம். 15 ஆயிரம் ஒற்றை அறை தொழிற்கூடங்கள் இருக்கிறது என கூறப்படுகிறது.
என்னதான் பணம் கொழிக்கும் இடமாக நான் இருந்தாலும் பொது சுகாதாரம் இங்கு கவலைக்கிடமாகவே இருக்கிறது. கழிவுநீர் ஓடை வசதி, கழிப்பிடம் வசதி, சுத்தமான குடிநீர் வசதி இங்கு கிடையாது. இப்படிப்பட்ட என்னை பல லட்சம் கோடி செலவு செய்து தாராவி புனரமைப்பு திட்டம் என்ற பெயரில் செக்டராக பிரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கான திட்டப்பணிகள் எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியே?
போர்ச்சுகீசியர்கள், ஆங்கிலேயர்கள் என பலரை பாத்த நான், இவர்கள்(மாநில அரசு) என்னை என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பார்க்கத்தான் போகிறேன். நான்... தாராவி... காலங்களை கடந்தவன்...
கே.வி. நிக்சன்.

Thursday, January 28, 2010


நன்றி பாலா.

Saturday, January 16, 2010

தேவலோகத்தில் ஒரு நாள்...


மறதி

மனிதனுக்கு மறதி அவசியம். எல்லாவற்றையும் நினைவில் வைத்திருத்தல் நல்லதல்ல. சிலவற்றை மறந்தாகவே வேண்டும். நமக்கு உதவியவர்களை மறக்க கூடாது, நாம் உதவியவர்களை கணக்கில் வைத்திருக்க கூடாது. கணகக்கிடுவது கடமையாகாது. மறதி என்றதும் எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது...
தேவலோகத்தில் ஒரு நாள் பகவான் விஷ்ணுவை சந்தித்த தேவர்கள், ''பூலோகத்தில் மும்மாரி மழை பொழிவதால் செல்வ செழிப்பு அதிகரித்துவிட்டது. மக்கள் அனைவரும் மகிழ்சியாக இருக்கின்றனர். இந்த மகிழ்ச்சி காரணமாக பகவானான உங்களை நினைத்து பார்க்கவும் வழிபடவும் மக்கள் மறந்துவிட்டனர். வறுமை வந்தால் மட்டுமே உங்களை அவர்கள் இனி நினைத்து பார்ப்பார்கள். எனவே அடுத்த 5 ஆண்டுக்கு மழை பொழியத் தூண்டும் சக்கரபானத்தை நீங்கள் உபயோகப்படுத்த கூடாது" என்றனர்.
தேவர்கள் கூறியதை கேட்ட விஷ்ணுவும், "அப்படியே ஆகட்டும்" என்றார்.
ஓர் ஆண்டுக்கு பின் பூலோகத்தில் ஒரு நாள் வயல்வெளி நடுவே இருக்கும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெரியவர் ஒருவர், ஏர் பூட்டி வயலில் உழுது கொண்டிருந்த விவசாயியை பார்த்து கேட்டார், "ஏப்பா நான் தினமும் காலையில் இந்த சாலையில் செல்லும் போதெல்லாம் பார்க்கிறேன் நீ ஏர் பூட்டி வயலை உழுது கொண்டிருக்கிறாயே. மழை பெய்து ஒரு வருடத்துக்கு மேலாகிறது. மழை பெய்வதற்கான அறிகுறிகளும் இல்லை. பிறகு ஏன் தினமும் வயலை உழுது கொண்டிருக்கிறாய்?" என்றார்.
அதற்கு அந்த விவசாயி கூறினார், ''மழை எப்போது வேண்டுமானாலும் பெய்யட்டும். அதற்காக நான் சும்மா இருந்தால் ஏர் பிடித்து உழுவதை மறந்துவிடுவேன். மறந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் தினமும் உழுது கொண்டிருக்கிறேன்" என்றார்.
அடுத்த வினாடியே மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது.
தேவலோகத்தில் பகவான் விஷ்ணுவிடம் ஓடி வந்து முறையிட்ட தேவர்கள், ''பூலோகத்தில் மழை பொழிகிறது. அப்படி என்றால் நீங்கள் சக்கரபானத்தை உபயோகப்படுத்திவிட்டீர்கள். இல்லையா" என்றனர். அதற்கு பகவான், ''ஆமாம்" என்றார். தேவர்களோ, ''5 ஆண்டுகள் சக்கரபானத்தை உபயோகப்படுத்த கூடாது என்று நாங்கள் உங்களிடம் கேட்டுக் கொண்டோமே. அதற்கு என்ன பதில் தரப் போகிறீர்கள்" என்றனர்.
பகவான் கூறினார், ''பூலோகத்தில் விவசாயி கூறியதை கேட்டீர்களா. 5 ஆண்டுகள் சக்கரபானத்தை உபயோகப்படுத்தாமல் சும்மா இருந்துவிட்டால் எங்கே மறந்துவிடுமோ என நினைத்து ஒருமுறை சக்கரபானத்தை உபயோகப்படுத்தி பார்த்தேன். அவ்வளவுதான்" என்றார்.
தேவர்களுக்கு அப்போதுதான் புரிந்தது பகவான் விஷ்ணுவின் விளையாட்டு.
இது கதையாக இருந்தாலும் அதிலுள்ள உண்மையை நாம் உணர வேண்டும். எதை மறக்க வேண்டும், எதை கூடாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

-கே.வி. நிக்சன்.

Friday, January 15, 2010

எல்லாம் புனிதம்...


எது புனிதம்?

வாந்தி புனிதம், எச்சில் புனிதம் மற்றும் பிணத்தின் உடை புனிதம். இவைகள் எப்படி புனிதமாகும் என எண்ணத் தோன்றுகிறதா?
ஆம்! வாந்தி புனிதம்தான் அது தேனீக்களின் வாயில் இருந்து தேனாக வரும் போது.
எச்சில் புனிதம்தான், கன்றுகுட்டி எச்சில்பட்ட பசுவின் மடியில் இருந்து பால் கரக்கப்படும் போது.
பிணத்தின் உடை புனிதம்தான் அது செத்த பட்டுப்பூச்சியின் உடையான கூட்டில் இருந்து நூல் எடுக்கப்பட்டு பட்டுத் துணியாகும் போது.
புனிதம் என்பது எல்லா இடத்திலும், எல்லா பொருட்களிலும், எல்லா செயலிலும் இருக்கிறது. அதை நாம்தான் தேடி கண்டுபிடிக்க வேண்டும்.

கே.வி. நிக்சன்.

HUMAN BEING அல்ல HUMAN GROWING...


தேனீக்களுக்கும் மனிதர்களுக்கு என்ன வித்தியாசம்?

கற்கால மனிதனுக்கு கல்லை கூட பயன்படுத்த தெரியாது. ஆனால் தேனீக்களுக்கு அப்போதே அழகான சின்ன, சின்ன அறைகள் கொண்ட ஒரு பெரிய தேன் சேகரிக்கும் கூட்டை கட்ட தெரியும். அப்படி என்றால் மனிதனைவிட தேனீக்கள் அறிவாளிகளா?
கற்கால மனிதன் இன்று எவ்வளவோ வளர்ச்சியடைந்து விண்ணை முட்டும் அளவுக்கு உயரமான, அழகான கட்டிடங்களை கட்ட கற்றுக் கொண்டுவிட்டான். ஆனால் தேனீக்களுக்கு இன்றுவரை தேன் கூடு மட்டுமே கட்டத் தெரியும். தேனீக்கள் வளர்ச்சியடையவில்லை. இதுதான் மனிதர்களுக்கும் தேனீக்களுக்கும் உள்ள வித்தியாசம். நாம் HUMAN BEING(ஒரு நிலையில் இருப்பது) அல்ல HUMAN GROWING(வளர்ச்சியடைவது).

-கே.வி. நிக்சன்.