Saturday, January 16, 2010
தேவலோகத்தில் ஒரு நாள்...
மறதி
மனிதனுக்கு மறதி அவசியம். எல்லாவற்றையும் நினைவில் வைத்திருத்தல் நல்லதல்ல. சிலவற்றை மறந்தாகவே வேண்டும். நமக்கு உதவியவர்களை மறக்க கூடாது, நாம் உதவியவர்களை கணக்கில் வைத்திருக்க கூடாது. கணகக்கிடுவது கடமையாகாது. மறதி என்றதும் எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது...
தேவலோகத்தில் ஒரு நாள் பகவான் விஷ்ணுவை சந்தித்த தேவர்கள், ''பூலோகத்தில் மும்மாரி மழை பொழிவதால் செல்வ செழிப்பு அதிகரித்துவிட்டது. மக்கள் அனைவரும் மகிழ்சியாக இருக்கின்றனர். இந்த மகிழ்ச்சி காரணமாக பகவானான உங்களை நினைத்து பார்க்கவும் வழிபடவும் மக்கள் மறந்துவிட்டனர். வறுமை வந்தால் மட்டுமே உங்களை அவர்கள் இனி நினைத்து பார்ப்பார்கள். எனவே அடுத்த 5 ஆண்டுக்கு மழை பொழியத் தூண்டும் சக்கரபானத்தை நீங்கள் உபயோகப்படுத்த கூடாது" என்றனர்.
தேவர்கள் கூறியதை கேட்ட விஷ்ணுவும், "அப்படியே ஆகட்டும்" என்றார்.
ஓர் ஆண்டுக்கு பின் பூலோகத்தில் ஒரு நாள் வயல்வெளி நடுவே இருக்கும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெரியவர் ஒருவர், ஏர் பூட்டி வயலில் உழுது கொண்டிருந்த விவசாயியை பார்த்து கேட்டார், "ஏப்பா நான் தினமும் காலையில் இந்த சாலையில் செல்லும் போதெல்லாம் பார்க்கிறேன் நீ ஏர் பூட்டி வயலை உழுது கொண்டிருக்கிறாயே. மழை பெய்து ஒரு வருடத்துக்கு மேலாகிறது. மழை பெய்வதற்கான அறிகுறிகளும் இல்லை. பிறகு ஏன் தினமும் வயலை உழுது கொண்டிருக்கிறாய்?" என்றார்.
அதற்கு அந்த விவசாயி கூறினார், ''மழை எப்போது வேண்டுமானாலும் பெய்யட்டும். அதற்காக நான் சும்மா இருந்தால் ஏர் பிடித்து உழுவதை மறந்துவிடுவேன். மறந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் தினமும் உழுது கொண்டிருக்கிறேன்" என்றார்.
அடுத்த வினாடியே மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது.
தேவலோகத்தில் பகவான் விஷ்ணுவிடம் ஓடி வந்து முறையிட்ட தேவர்கள், ''பூலோகத்தில் மழை பொழிகிறது. அப்படி என்றால் நீங்கள் சக்கரபானத்தை உபயோகப்படுத்திவிட்டீர்கள். இல்லையா" என்றனர். அதற்கு பகவான், ''ஆமாம்" என்றார். தேவர்களோ, ''5 ஆண்டுகள் சக்கரபானத்தை உபயோகப்படுத்த கூடாது என்று நாங்கள் உங்களிடம் கேட்டுக் கொண்டோமே. அதற்கு என்ன பதில் தரப் போகிறீர்கள்" என்றனர்.
பகவான் கூறினார், ''பூலோகத்தில் விவசாயி கூறியதை கேட்டீர்களா. 5 ஆண்டுகள் சக்கரபானத்தை உபயோகப்படுத்தாமல் சும்மா இருந்துவிட்டால் எங்கே மறந்துவிடுமோ என நினைத்து ஒருமுறை சக்கரபானத்தை உபயோகப்படுத்தி பார்த்தேன். அவ்வளவுதான்" என்றார்.
தேவர்களுக்கு அப்போதுதான் புரிந்தது பகவான் விஷ்ணுவின் விளையாட்டு.
இது கதையாக இருந்தாலும் அதிலுள்ள உண்மையை நாம் உணர வேண்டும். எதை மறக்க வேண்டும், எதை கூடாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
-கே.வி. நிக்சன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment