Monday, July 26, 2010
தொல்கதை கதாபாத்திரங்கள்
அட்லஸ்: கிரேக்க தொல்கதையில் தோன்றும் டைட்டன் இனத்தின் மூதாதையர்களில் ஒருவர் அட்லஸ். ஒலிம்பியன்ஸ் மற்றும் டைட்டன்களுக்கு இடையே நடந்த போரில், தற்போது அட்லஸ் மலை என அழைக்கப்படும் சிகரத்தில் இருந்தபடி டைட்டன்களுக்கு ஆதரவு அளித்தவர். கடல் தேவதையின் மகளான கிலைமேனுக்கும் டைட்டன் லாபெடசுக்கும் பிறந்தவர். வலிமை மற்றும் வீரம் மிக்கவர். இவருக்கு மெனோய்டியஸ், பிரோமிதியஸ் மற்றும் எபிமிதியஸ் என மூன்று சகோதரர்கள்.
அட்லஸ் மீது மோகம் கொண்ட பல தேவதைகள், அவரோடு கொண்ட உறவு காரணமாக பல குழந்தைகளுக்கு அட்லஸ் தந்தையானார். இவருக்கு பிறந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் பெண்கள். ஹெஸ்பிரிடஸ், ஹையாடஸ், ஹையாஸ்(மகன்), பிளேய்டஸ், கலிப்சோ, டியோனே, மாய்ரா ஆகியோர் அட்லசின் பிள்ளைகளாவர்.
போரில் ஒலிம்பியன்சிடம் டைட்டன்கள் தோற்றனர். அட்லசின் சகோதரர்களான பிரோமிதியஸ் மற்றும் எபிமிதியஸ், டைட்டன்களுக்கு துரோகம் செய்து ஒலிம்பியன்சுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு அளித்ததால் போரில் டைட்டன்கள் தோற்க நேரிட்டது. போரில் தோற்றதால் கோபமடைந்த ஜீயூஸ் கடவுள், டைட்டன்களை பாதாள உலகத்துக்கு அனுப்பினார். ஆனால் அட்லசை, பூமியின் மேற்கு நுழைவாயிலில் நிற்க செய்து வானை தோள்களில் தாங்கும்படி கட்டளையிட்டார் ஜீயூஸ். இது அட்லசுக்கு வழங்கப்பட்ட தண்டனை. அட்லஸ் பூமியை தாங்கியபடி நிற்கும் சின்னம் 16ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. ஆனால், உண்மையில் அட்லஸ் தாங்கியது வானைத்தான் பூமியை அல்ல.
ரோமானிய தொல்கதை கதாப்பாத்திரமான ஹெர்குலீசுக்கு வழங்கப்பட்ட 12 சோதனைகளில் ஒன்று தங்க ஆப்பிளை பறிக்க வேண்டும் என்பதாகும். தங்க ஆப்பிள் இருக்கும் தோட்டத்தை அட்லசின் மகள் ஹெஸ்பிரிடசும் லாடோன் என்ற டிராகனும் பாதுகாத்து வந்தனர். ஆப்பிளை பறிக்க அட்லசின் உதவியை நாடிய ஹெர்குலீஸ், வானை தனது தோள்களில் தாங்க, தண்டனையில் இருந்து விடுபட்ட அட்லஸ் தோட்டத்துக்கு சென்று தங்க ஆப்பிளை பறித்து வந்தார். ஆனால் வானை நிரந்தரமாக ஹெர்குலீசின் தோள்களில் வைத்துவிட வேண்டும் என திட்டமிட்ட அட்லஸ், தங்க ஆப்பிளை தானே அரசரிடம் கொண்டு போய் சேர்ப்பதாக கூறினார். ஆப்பிளை கொடுக்க சென்றால் அட்லஸ் திரும்பி வரமாட்டார், வான் தனது தோள்களில் நிரந்தரமாகிவிடும் என்பதை புரிந்து கொண்ட ஹெர்குலீஸ், அட்லசிடம் சரி என கூறினார். ஆனால், சிறிது நேரம் வானை தாங்கி கொண்டால் தனது தோள்களை சரி செய்து கொள்வேன் என கூறி அட்லசிடம் வானை ஒப்படைத்த ஹெர்குலீஸ், தங்க ஆப்பிளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடினார். வான் மீண்டும் அட்லசின் தோள்களில் நிரந்தரமானது. இன்று வரை வானை அட்லஸ் தாங்கிக் கொண்டிருப்பதாக கிரேக்க தொல்கதை கூறுகிறது.
ஹெர்குலீஸ்: கிரேக்க தொல்கதை கதாப்பாத்திரமான ஹெராக்லஸ் என்ற பெயரில் இருந்து தோன்றியதே ஹெர்குலீஸ். ரோமானிய தொல்கதை கதாப்பாத்திரமான ஹெர்குலீஸ், ஜூபிட்டர் கடவுளுக்கும் மனித பெண்ணான அல்க்மேனாவுக்கு பிறந்தவர். ஹெர்குலீசை தலைமை நாயகனாக கொண்டு பல ரோமானிய கதைகள் தோன்றின. ரோமானியர்கள் ஆட்சி புரிந்த காலத்தில், ஹிஸ்பானியா முதல் காவுல் வரை வாழ்ந்த உள்ளூர் மக்கள் ஹெர்குலீசை கடவுளாக வழிபட்டனர்.
சிங்கத் தோல், தண்டாயுதம் சகிதமாக காணப்படும் ஹெர்குலீஸ், புத்திசாலியான வீரர். அல்க்மேனாவுடன் உறவு கொண்டதால் கோபமடைந்த ஜூபிட்டரின் மனைவி ஹேரா, அல்க்மேனாவுக்கு பிறந்த ஹெர்குலீசை விரோதியாக பார்த்தாள். குழந்தையாக இருக்கும் போது ஹெர்குலீஸ் மீது அன்பாக இருந்த ஹேரா, ஒருமுறை குழந்தை மார்பில் அணைத்தபடி தூங்கினாள். அவள் தூங்கும் போது விழித்த குழந்தை, தனது தாய் என எண்ணி ஹேராவின் மார்பில் இருந்து பாலை குடித்தது. தேவதையிடம் பாலை குடித்ததால் ஹெர்குலீஸ் தெய்வதன்மை அடைந்தார். ஆனால் மனித பெண்ணுக்கு பிறந்ததால் அவர் மனிதனாக வாழ்ந்தார். தன்னுடைய பாலை குடித்து தெய்வதன்மை அடைந்ததாலேயே ஹெர்குலீசை, ஹேரா விரோதியாக பார்க்க தொடங்கினாள்.
டெயனேய்ரா என்ற பெண்ணை மணந்த ஹெர்குலீசுக்கு நிறைய குழந்தைகள் பிறந்தன. சந்தோஷமாக வாழ்ந்த ஹெர்குலீசை பார்க்க சகிக்காத ஹேரா, ஹெர்குலீசின் பார்வையை பறித்தாள். குருடரான ஹெர்குலீஸ், விரோதி என நினைத்து தனக்கு பிறந்த குழந்தைகளை கொன்றார். ஹேராவின் சாபத்தில் இருந்து விடுபட மைகேனாய் நாட்டு மன்னன் யுரேதியசுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என வானில் இருந்து வந்த அசரியை ஏற்றுக் கொண்ட ஹெர்குலீஸ், கண் பார்வையை திரும்ப பெற்றார். பிறகு அசரியை கூறியபடி யுரேதியஸ் மன்னனுக்கு அடிமையாக பணியாற்றினார். அடிமையான ஹெர்குலீசுக்கு யுரேதியஸ் 12 கடும் சோதனைகள் வைத்தார். எல்லா சோதனைகளிலும் வெற்றி பெற்ற ஹெர்குலீஸ், யுரேதியஸ் மன்னனிடம் இருந்து விடுதலை பெற்றார். சோதனைகளின் போது பல தீய சக்திகளை அழித்ததால் 'உலகை காப்பாற்றியவர்' என ஹெர்குலீஸ் அழைக்கப்பட்டார்.
மனைவி டெயனேய்ராவுடன் தூர தேசம் செல்லும் வழியில் ஹெர்குலீசுக்கு பெரிய ஆற்றை கடக்க நேரிட்டது. படகுடன் வந்த நெஸ்சுஸ், ஹெர்குலீசுக்கு உதவ முன்வந்தான். ஆனால் அவனது நோக்கம் டெயனேய்ராவை கடத்தி செல்ல வேண்டும் என்பதாகும். இதை அறிந்த ஹெர்குலீஸ், நெஸ்சுசை கொல்ல முயன்றார். அவன் தப்பியோட, துரத்தி சென்ற ஹெர்குலீஸ் நெஸ்சுஸ் மீது விஷ அம்பை ஏய்து கொன்றார். சாகும் முன்பு தனது ரத்தத்தை பிடித்து வைத்துக் கொள்ளுமாறு டெயனேய்ராவிடம் ரகசியமாக கூறிய நெஸ்சுஸ், ஹெர்குலீஸ் துரோகம் செய்தால் அவரது அன்பை மீண்டும் பெற ரத்தத்தை பயன்படுத்துமாறு தெரிவித்தான். ரத்தத்தை பிடித்து அதை ஹெர்குலீசுக்கு தெரியாமல் டெயனேய்ரா ரகசியமாக வைத்திருந்தாள்.
சில ஆண்டுகள் சென்றது. ஒரு நாள், ஹெர்குலீசுக்கும் வேறொரு பெண்ணுக்கு தொடர்பு இருப்பதை அறிந்த டெயனேய்ரா கணவரின் அன்பு பறிபோய்விடுமோ என அஞ்சினாள். நெஸ்சுஸ் கூறியது நினைவுக்கு வர, ரகசியகாம வைத்திருந்த ரத்தத்தை ஹெர்குலீசின் ஆடையில் தடவினாள். அந்த ரத்தத்தில் நெஸ்சுசை கொல்ல ஹெர்குலீஸ் பயன்படுத்திய அம்பில் இருந்த விஷம் கலந்திருந்ததை டெயனேய்ரா அறியவில்லை. ரத்தம் தடவப்பட்ட ஆடையை அணிந்ததும் ஹெர்குலீசை விஷம் தாக்கியது. அவரது உடல் தீ பிடித்து எரிந்தது. தான் பயன்படுத்திய விஷமே தன்னை எரிக்கிறது என்பதையும் நெஸ்சுசின் சதியையும் ஹெர்குலீஸ் தெரிந்து கொண்டார். ஆனால் என்ன செய்ய முடியும், ஹெர்குலீசை விஷம் கொன்றது. மரணமடைந்த ஹெர்குலீசை, தந்தையான ஜூபிட்டர் கடவுளாக மாற்றினார்.
ஹெர்குலீஸ் கடவுளானார் என்பது ரோமானியர்களின் நம்பிக்கை.
ஹெக்டர்: கிரேக்க தொல்கதை கதாபாத்திரமான ஹெக்டர், அன்பானவர், அமைதிய விரும்புபவர், போரை வெறுப்பவர், வீரமானவர், தந்தைக்கு நல்ல மகன், மனைவிக்கு நல்ல கணவர், மகனுக்கு நல்ல தந்தை, எந்த கெட்ட குணமும் இல்லாதவர் என பல சிறப்புகளை கொண்டவர். டிராய் நாட்டு அரசரான பிரியம் மற்றும் ஹெகுபாவுக்கு பிறந்த மூத்த மகன், அந்நாட்டு இளவரசன். டிரோஜன் போரில் டிராய் மற்றும் கூட்டு படைகளின் தளபதியாக இருந்து கிரேக்க வீரர்களை கொன்று குவித்த மாவீரன்.
இவரது சகோதரகள் டெய்போபஸ், ஹெலனுஸ் ,பாரீஸ் மற்றும் கூட்டு படை தலைவனான பாலிடாமஸ் ஆகியோரது துணையுடன் டிராய்க்கு எதிரான டிரோஜன் போரை நடத்திய ஹெக்டரின் திறமையை கண்டு கிரேக்க மாவீரர்களான அகிலீஸ், டியோமடஸ் மற்றும் ஒடிசீயஸ் வியந்தனர். டிராய் மண்ணில் கால் பதிக்கும் முதல் கிரேக்க வீரன் மரணமடைவான் என்ற சாபத்திற்கேற்ப, டிராய் கடற்கரையில் இறங்கிய முதல் வீரனான பிரோடெசிலசை ஹெக்டர் கொன்றார்.
ஹோமர் எழுதிய 'இலியட்' காப்பியத்தில் படைக்கப்பட்ட மாவீரர்களில் தலைசிறந்தவர் ஹெக்டர் என கூறினால் அது மிகையாகாது. இலியட் காப்பியத்தின் கடைசி வரி ஹெக்டருக்காக அர்ப்பணிக்கப்பட்ட வரியாகும். ஹோமர் மதித்த, விரும்பிய கதாப்பாத்திரம் ஹெக்டர் என்று கூறப்படுகிறது.
மாவீரரான அகிலீசை டிராய் நகருக்கு வெளியே தன்னந்தனியாக எதிர்த்து போரிட்டு வீர மரணமடைந்தவர் ஹெக்டர். போரில் வென்றவர் இறந்தவரின் உடலை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என அகிலீசிடம் ஹெக்டர் கேட்க, அதற்கு மறுத்த அகிலீஸ் ஹெக்டர் கழுத்தில் தனது வேலை பாய்த்தார். மரணமடைந்த ஹெக்டரின் உடலை தனது குதிரை வண்டியில் கட்டி கிரேக்க படை முகாமுக்கு இழுத்து சென்று அதை 12 நாட்கள் வைத்து பல்வேறு வகைகளில் இழிவுபடுத்தினார். ஆனால் கடவுள்களின் ஆசீர்வாதத்தால் ஹெக்டர் உடல் சேதமடையாமல் இருந்தது. அகிலீசின் நடவடிக்கையை கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத கடவுள்கள் இறுதியாக அகிலீசின் தாயை தூது அனுப்பினர். தாய் வந்து பேசியதை அடுத்து ஹெக்டரின் உடலை அவரது தந்தை பிரியமிடம் ஒப்படைக்க அகிலீஸ் சம்மதித்தார். மகனின் உடலை பெற வந்த பிரியம், அகிலீசுக்கு விலை உயர்ந்த பொருட்களை பரிசாம கொடுத்தார். பிறகு ஹெக்டரின் உடலை டிராய்க்கு எடுத்து சென்ற பிரியம், 12 நாட்கள் துக்கம் அனுசரித்து இறுதி சடங்குகளை நடத்தினார்.
-கே.வி. நிக்சன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment