Friday, July 9, 2010
உலகை உலுக்கிய பிரபலங்களின் மரணம்
மர்லின் மன்றோ: தன்னுடைய அழகு, கவர்ச்சி மற்றும் அப்பாவித்தனத்தால் உலகை ஈர்த்தவர். ஜெண்டில்மேன் பிரிபேர்ஸ் பிளோண்ட்ஸ், ஹௌ டு மேர்ரி ஏ மில்லினியர், தி செவன் இயர்ஸ் இட்ச் ஆகிய திரைப்படங்கள் மர்லினை ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தியது. சம் லைக் இட் ஹாட் என்ற திரைப்படத்துக்காக கோல்டன் குளோப் விருது வென்றார்.
1962, ஆகஸ்ட் 5ம் தேதி தன்னுடைய பிரெண்ட்வுட் வீட்டில் படுக்கையறையில் நிர்வாண கோலத்தில் மர்லின் பிணமாக கிடந்தார். அப்போது அவருக்கு வயது 36. தூக்க மாத்திரைகள் அதிகமாக சாப்பிட்டதால் மர்லின் மரணமடைந்ததாக கூறப்பட்டது. ஆனால் மர்லினின் மரணத்துக்கு பின்னால் பெரிய சதி நடந்துள்ளதாக பல கட்டுக்கதைகள் வெளிவந்தன. அந்த கட்டுக்கதைகளில் சில, மர்லினின் மரணத்துக்கு எப்.பி.ஐ காரணம் என்றும் அமெரிக்க அதிபர் ஜான் எப். கென்னடி மற்றும் அவரது சகோதரர் ராபர்ட் காரணம் என்றும் கூறின. எது எப்படியோ இன்று வரை மர்லின் மரணம் ஒரு மர்மமாகவே உள்ளது.
இளவரசி டயானா: வால்ஸ் இளவரசர் சார்லஸை 1981, ஜூலை 29ம் தேதி திருமணம் செய்து கொண்ட பிறகு டயானா, உலக பிரபலங்களில் ஒருவரானார். சார்லஸ்-டயானா தம்பதிக்கு இரண்டு மகன்கள், இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹர்ரி. 1996, ஆகஸ்ட் 28ம் தேதி சார்லஸ்-டயானா தம்பதி விவாகரத்து செய்து கொண்டு பிரிந்தது.
1997, ஆகஸ்ட் 31ம் தேதி பாரீஸ் நகரில் உள்ள பாண்ட் டெல் அல்மா சாலையில் நடந்த கார் விபத்தில், வால்ஸ் இளவரசி டயானா உயிரிழந்தது உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விபத்தில் டயானாவோடு அவரது எகிப்திய கோடீஸ்வர காதலர் டோடி பாயத் மற்றும் கார் டிரைவர் ஹென்ரி பால் ஆகியோரும் மரணமடைந்தனர். டோடி பாயத்தின் மெய்காப்பாளர் டிரெவோர் ரீஸ் ஜோன்ஸ் மட்டும் தலையில் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். டயானா மற்றும் அவரது காதலர் டோடி பாயத் ஆகியோரை படம்பிடிக்க பத்திரிகையாளர்கள் துரத்தி வந்தால் காரை வேகமாக ஓட்டிச் சென்ற ஹென்ரி பால் கட்டுப்பாட்டை இழந்ததால் கார் விபத்துக்குள்ளானது என கூறப்பட்டது.
கார் விபத்து ஒரு பெரிய சதி திட்டம் என்றும் எடின்பர்க் டியூக், இளவரசர் பிலிப் தீட்டிய திட்டம் இது என்றும் டோடி பாயத் தந்தை முகமது அல்-பாயத் குற்றம்சாட்டினார்.
செப்டம்பர் 6ம் தேதி லண்டனின் வெஸ்ட்மினிஸ்டர் அபெயில் நடந்த இளவரசி டயானாவின் இறுதி சடங்கில் சுமார் 3 மில்லியன் பேர் கலந்து கொண்டு தங்களது இரங்கலை தெரிவித்தனர்.
அன்னா நிகோல் ஸ்மித்: மாடல் அழகியும் நடிகையுமான அன்னா, அமெரிக்க சின்னத்திரை பிரபலங்களில் ஒருவர். 'தி அன்னா நிகோல் ஷோ' என்ற பெயரில் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தி வந்தார்.
2007, பிப்ரவரி 8ம் தேதி, டாக்டர் பரிந்துரைத்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உண்டதால் அன்னா மரணமடைந்தார். புளோரிடா மாகாணம், ஹாலிவுடில் உள்ள செமினோல் ஹார்ட் ராக் கேசினோ ஓட்டலில் அறை எண் 607ல், அன்னா பிணமாக கிடந்தார்.
அன்னா மரணத்துக்கு பிறகு அவருக்கு பிறந்த மகள் டேனியலன் தந்தை யார் என்பதில் பிரச்னை ஏற்பட்டது. அன்னாவின் வழக்கறிஞர் ஹோவர்ட் ஸ்டெர்ன் தான் தான் டேனியலன் தந்தை என கூறினார். அதே வேளையில் அன்னாவின் மாஜி காதலர் லர்ரி பிர்க்ஹட் தான் தான் டேனியலன் தந்தை என்றார். டேனியலன் பிறப்பு சான்றிதழில் ஹோவர்ட் ஸ்டெர்ன் தந்தை என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் மரபணு பரிசோதனையில் லர்ரி பிர்க்ஹட் மரபணு டேனியலன் மரபணுவுடன் ஒத்துப் போனது.
அன்னா இறப்பதற்கு முன்பு தனது மகன் டேனியல்(20) மரணமடைந்தது குறித்து விசாரணை நடத்தி வந்தார். டேனியலனை பிரசவித்த அன்னா மருத்துவமனையில் இருந்த போது, தாய் மற்றும் தனது புதிய தங்கையை பார்க்க வந்த டேனியல் மர்மமான முறையில் மரணமடைந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில், அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை உண்டதால் டேனியல் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
டேனியல், அன்னா அடுத்தடுத்து மரணமடைந்ததும் டேனியலன் தந்தை யார் என்பதில் ஏற்பட்ட சர்ச்சையும் உலகை உலுக்கியது.
பிரிட்டனி மர்பி: பல்முக நடிகையான இவர் குளுலெஸ், கர்ள் இண்டரப்டட், 8 மைல் மற்றும் சின் சிட்டி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். கிங் ஆப் தி ஹில் கார்டூன் படத்தில் லுயன்னே பிளட்டர் கதாபாத்திரத்துக்கு குரல் கொடுத்துள்ளார். 'பாஸ்டர் கில் புஸ்சிகேட்' என்ற இசை தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.
ஹாலிவுட் ஹில் ரெசிடன்சியில் உள்ள தனது வீட்டின் குளியலறையில் 2009, டிசம்பர் 20ம் தேதி பிரிட்டனி மயங்கிய நிலையில் கிடந்தார். செடர்ஸ் சினால் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்ட பிரிட்டனியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். பிரேத பரிசோதனையில் நிமோனியா, இரும்பு சத்து குறைவு மற்றும் பல்வேறு மருந்துகளை சாப்பிட்டதால் பிரிட்டனி மரணமடைந்ததாக தெரியவந்தது.
பிரிட்டனி மரணமடைந்த 5 மாதம் கழித்து அதே ரெசிடன்சியில் தங்கி இருந்த, பிரிட்டனி நடித்து வந்த படத்தை தயாரித்த விடோவர் சிமொன் மோன்ஜாக் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பிரிட்டனி கடைசியாக நடித்த 'அபண்டண்ட்' திரைப்படம் இந்த ஆண்டு திரைக்கு வர இருக்கிறது.
கிரேஸ் கெல்லி: 1950களில் ஹாலிவுட் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் கிரேஸ் கெல்லி. 'மொகம்போ', 'ரியர் விண்டோ', 'டையல் எம் பார் மர்டர்', 'தி கண்ட்ரீ கர்ள்' உட்பட பல திரைப்படங்களில் நடித்தவர். 'தி கண்ட்ரீ கர்ள்' படம் இவருக்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை பெற்று கொடுத்தது. திரைப்பட இயக்குனர் அல்ப்ரெட் ஹிட்ச்காகிற்கு மிக நெருக்கமானவர் கிரேஸ்.
1955, ஏப்ரல் மாதத்தில் மொனகோ இளவரசர் மூன்றாம் ராய்னியரை கிரேஸ் முதல் முதலில் சந்தித்தார். தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளுமாறு கிரேசுக்கு ராய்னியர் அழைப்பு விடுத்ததை அடுத்து மொனகோ சென்ற கிரேஸ், இளவரசரை சந்திக்க நேரிட்டது. கிரேசின் அழகில் மயங்கிய ராய்னியர், தன்னை திருமணம் செய்து கொள்ளுபடி கிரேசிடம் கேட்க அவரும் சம்மதம் தெரிவித்தார்.
1956, ஏப்ரல் 19ம் தேதி ராய்னியர்-கிரேஸ் திருமணம் நடந்தது. 20ம் நூற்றாண்டின் மிகப்பெரிய திருமணம் என ராய்னியர்-கிரேஸ் திருமணம் கூறப்பட்டது. வரதட்சணையாக கிரேசின் குடும்பம் ராய்னியருக்கு 2,000,000 டாலர்கள் கொடுத்தது. ராய்னியர் மனைவியான பின், கிரேஸ் மொனகோவின் இளவரசியானார்.
1982, செப்டம்பர் 18ம் தேதி தனது மகள் இளவரசி ஸ்டெபனியுடன் காரில் சென்று கொண்டிருந்த போது கிரேஸ் கட்டுப்பாட்டை இழந்ததால் கார் விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற போதிலும் பலனின்றி மறுநாள் உயிரிழந்தார். இந்த விபத்தில் ஸ்டெபனி சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் சில ஆண்டுகள் கழித்துதான், விபத்தில் அவரது கழுத்து எலும்பில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
53வது பிறந்த நாளை 2 மாதங்கள் கழித்து கொண்டாட வேண்டிய நிலையில் கிரேஸ் திடீரென மரணமடைந்தது உலகை அதிர்ச்சிக்குள்ளாகியது. கிரேசின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 100 மில்லியன் பேர் கலந்து கொண்டனர். இளவரசி டயானா, ஹாலிவுட் நட்சத்திரங்கள் கேரி கிராண்ட், ஜேம்ஸ் ஸ்டெவார்ட் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
ஜானிஸ் ஜோப்லின்: 1960களில், ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த 'ராக்' இசை உலகில் புகுந்த முதல் பெண் இவர். பாடகியும் பாடலாசிரியையுமான ஜோப்லின், 'பிக் பிரதர்', 'ஹோல்டிங் கம்பெனி', 'தி காஸ்மிக் புளூஸ் பேண்ட்', 'புல் டில்ட் போகீ பேண்ட்' உட்பட பல இசை அமைப்புகளுக்கு பணியாற்றினார்.
1970, அக்டோபர் 4ம் தேதி, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் தான் தங்கியிருந்த லேண்ட்மார்க் மோட்டார் ஓட்டலில் ஜோப்லின் பிணமாக கிடந்தார். மது அதிகமாக அருந்தியதாலும் ஹெராயின் போதைப் பொருளை அதிகம் எடுத்துக் கொண்டதாலும் ஜோப்லின் மரணமடைந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. ஜோப்லினுக்கு வழக்கமாக ஹெராயின் சப்ளை செய்யும் நபர், அதிக சக்தி கொண்ட ஹெராயினை தவறுதலாக கொடுத்ததால் ஜோப்லின் மரணமடைய நேரிட்டது என அவரது மேலாளர் ஜான் கூக் தெரிவித்தார். அந்த வாரத்தில் ஹெராயின் பயன்படுத்தும் பலர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோப்லின் இறுதி சடங்குகள் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடந்தது. அவரது அஸ்தி விமானத்தில் எடுத்து செல்லப்பட்டு பசிபிக் பெருங்கடலில் தூவப்பட்டது.
எல்வீஸ் பிரெஸ்லி: அமெரிக்காவின் இசை மற்றும் பாப்புலர் கலாச்சார புதிய யுகத்தின் ராக் அண்ட் ரோல் இசை அரசராக திகழ்ந்தவர் எல்வீஸ் பிரெஸ்லி. பெரும் வெற்றி பெற்ற 33 திரைப்படங்களில் நடித்துள்ளார். சாதனை படைத்த பல இசை நிகழ்ச்சிகள் நடத்திய பிரெஸ்லி, தொலைக்காட்சி மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளில் தோன்றி வரலாறு படைத்தவர். திறமை, அழகு, வசீகரம் ஆகியவற்றால் லட்சக்கணக்கானவர்களை ஈர்த்த பிரெஸ்லி, 20ம் நூற்றாண்டின் பாப்புலர் கலாச்சார சின்னமாக விளங்கினார்.
போதை பழக்கத்துக்கு அடிமையான இவர், உடல் பருத்து பல நோய்களுக்கு சொந்தக்காரரானார். 1977, ஆகஸ்ட் 16ம் தேதி தனது வீட்டில் குளியலறையில் பிரெஸ்லி பிணமாக கிடந்தார். பிரேத பரிசோதனையில், இருதய துடிப்பு சீர்கேடு காரணமாக பிரெஸ்லி உயிரிழந்ததாக தெரியவந்தது.
'அமெரிக்க பாப்புலர் கலாச்சாரத்தின் நிரந்தர முகம் பிரெஸ்லி' என அதிபர் ஜிம்மி கார்டர், பிரெஸ்லிக்கு புகழாரம் சூட்டினார்.
இவரது முழு பிரேத பரிசோதனை அறிக்கையை சீலிட்ட பிரெஸ்லியின் தந்தை வெர்னோன் பிரெஸ்லி, 2027ம் ஆண்டு வரை அதை வெளியிட தடை விதித்தார்.
ஜாண் லென்னோன்: பால் மெக்கார்ட்னியுடன் இணைந்து 'பீட்டில்ஸ்' இசை குழுவை நிறுவிய ஜாண் லென்னோன், பாபுலர் இசை வரலாற்றில் மிகப்பெரிய இடத்தை பிடித்தவர்.
1980, டிசம்பர் 8ம் தேதி மாலை, தான் வசித்து வந்த, நியூ யார்க் நகரில் உள்ள 'தி டாகோடா' கட்டிடத்தின் நுழைவு வாயிலில் வைத்து லென்னோனை, பீட்டில்ஸ் மாஜி ரசிகர் மார்க் டேவிட் சாப்மேன் என்பவர் சுட்டுக் கொன்றார். அன்று காலை தனது மனைவி யோகோ ஓனோவுடன் 'ரோலிங் ஸ்டோன்' இதழுக்கு போஸ் கொடுக்க சென்ற லென்னோன், ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போடும் போது சாப்மேனை சந்தித்தார்.
25 வயதான, ஹவாய் நகரை சேர்ந்த சாப்மேன், லென்னோனை கொலை செய்யும் நோக்கத்துடன் அக்டோபர் மாதம் நியூ யார்க் வந்தார். ஆனால் திடீரென தனது முடிவை மாற்றிய சாப்மேன் ஹவாய் திரும்பி சென்றார்.
லென்னோன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சாப்மேன், 20 ஆண்டு சிறை வாசத்துக்கு பின் கடந்த 2000ம் ஆண்டில் ஆட்டிகா சிறைச் சாலையில் இருந்து பரோலில் வெளியே வந்தார்.
நீங்கள் பார்க்கும் படம், லென்னோன் கொலை செய்யப்படுவதற்கு முன்பு, அன்று காலை 'ரோலிங் ஸ்டோன்' இதழுக்காக மனைவியுடன் போஸ் கொடுத்த புகைப்படம்.
ஜேம்ஸ் டீன்: 3 படங்களில் மட்டுமே நடித்திருந்த ஜேம்ஸ் டீன், வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்தார். ஆனால் அவரது துரதிர்ஷ்டவசம் 24 வயதிலே சாலை விபத்தில் மரணமடைந்தார்.
'ரெபல் வித்அவுட் ஏ காஸ்' என்ற படத்தில் புரட்சியாளராக நடித்த டீனுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பாப்புலர் கலாச்சாரத்தில் இவருக்கு ஒரு இடம் கிடைக்க செய்தது இந்த புரட்சியாளர் கதாபாத்திரம். அவர் வாழ்ந்த போது அவர் நடித்து வெளியான ஒரே படம் 'ஈஸ்ட் ஆப் ஈடன்' ஆகும். டீனுக்கு பெயர் வாங்கி கொடுத்த 'ரெபல் வித்அவுட் ஏ காஸ்' படம் அவரது மரணத்துக்கு பின்பே வெளியானது.
1955, செப்டம்பர் 30ம் தேதி மாலை 5.30 மணிக்கு தன்னுடைய மெக்கானிக் ரோல்ப் வாத்ரிச்சுடன் காரில் சென்று கொண்டிருந்த டீன், ஹைவே 466ல் டோனால்ட் என்ற 23 வயது நபர் ஓட்டி சென்ற காருடன் மோதி விபத்துக்குள்ளானர். இந்த விபத்தில் வாத்ரிச் மற்றும் டோனால்ட் அதிர்ஷ்டசமான உயிர் தப்பினர். ஆனால் டீன் உயிரிழந்தார். இளம் வயதில் டீன் மரணமடைந்தது அமெரிக்க மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஜாண் எப். கென்னடி ஜூனியர்: அமெரிக்காவின் 35வது அதிபராக ஜாண் எப். கென்னடி பதவி ஏற்று 16 நாட்கள் கழித்து, அதாவது 1960, நவம்பர் 25ம் தேதி பிறந்தவர் ஜாண் எப். கென்னடி ஜூனியர்.
குடும்பத்தின் மூத்த மகனான ஜாண் எப். கென்னடி ஜூனியரை அவரது தாயார் ஜாக்குலின் போவியர் அளவுக்கு அதிகமாக பாசத்தை பொழிந்து வளர்த்தார்.
விமானி, வழக்கறிஞர், சமூகவாதி மற்றும் அரசியல் இதழான 'ஜார்ஜ்' நிறுவனர் என பன்முகவாதியாக திகழ்ந்த கென்னடி ஜூனியர், ஜாண் எப். கென்னடியின் அரசியல் வாரிசாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.
1999, ஜூலை 16ம் தேதி, தனது மனைவி கரோலின், மைத்துனி லாரா ஆகியோருடன் விமானத்தில் பறந்து கொண்டிருந்த கென்னடி ஜூனியர், அட்லாடிக் கடலில் மார்தாஸ் வொயின்யார்டு அருகே தரையிறங்க முயன்ற போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். இந்த விபத்தில் கென்னடி ஜூனியரின் மனைவி மற்றும் மைத்துனியும் மரணமடைந்தனர். விபத்துக்கு காரணம், விமானியான கென்னடி ஜூனியர் தரையிறங்கும் போது விமானத்தின் கட்டுப்பாட்டை இழந்ததுதான் என தெரியவந்தது.
கென்னடி ஜூனியர், அவரது மனைவி மற்றும் மைத்துனியின் அஸ்தி அமெரிக்க போர் கப்பலில் எடுத்து செல்லப்பட்டு மார்தாஸ் வொயின்யார்டு கடற்பகுதியில் தூவப்பட்டது.
மைக்கேல் ஜாக்சன்: பாப் இசை அரசர் என அழைக்கப்பட்ட மைக்கேல் ஜாக்சன், இசை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவரது இசை, நடனம் மற்றும் பேஷன் 1980 மற்றும் 90களில் மக்களை வெகுவாக கவர்ந்தது.
பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான ஜாக்சன், சில நேரங்களில் தவறான முடிவும் எடுத்தார். இதன் காரணமாக சில மாதங்கள் இசை நிகழ்ச்சிகளில் இருந்து விலகி இருந்தார். பெரும் முயற்சிக்கு பிறகு 2009ம் ஆண்டு லண்டன் இசை நிகழ்ச்சி ஒன்றில் ஜாக்சன் கலந்து கொள்ள இருந்தார். ஆனால் ஜூன் 25ம் தேதி, கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் வீட்டில் ஜாக்சன் பிணமாக கிடந்தார். அவரது மரணத்து காரணம் மாரடைப்பு என மருத்துவ அறிக்கை குறிப்பிட்டது.
ஆனால் இரண்டு மாதம் கழித்து ஜாக்சன் கொலை செய்யப்பட்டுள்ளார் என கூறிய போலீசார், பாடகரின் டாக்டரான கான்ராட் முர்ரேயை கைது செய்து விசாரணை நடத்தினர். டாக்டர் கொடுத்த தவறான மற்றும் அளவுக்கு அதிகமான மருந்து காரணமாக ஜாக்சனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட முர்ரே, 2010 பிப்ரவரி மாதம் ஜாமீனில் விடுதலையானார்.
ஜாக்சனின் நினைவு ஊர்வலம் ஜூலை 7ம் தேதி லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள ஸ்டாபிள்ஸ் பகுதியில் நடந்தது. இது உலகம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. நினைவு ஊர்வலத்தில், ஜாக்சனின் ரசிகர்கள் லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த ஊர்வலத்தை தொலைக்காட்சியில் கண்ட ரசிகர்களின் எண்ணிக்கை 1 மில்லியன் ஆகும்.
ஹீத் லெட்ஜர்: தனது 19வது வயதில் '10 திங்க்ஸ் ஐ ஹேட் அபவுட் யூ' என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமான லெட்ஜர், 'தி பேட்ரியாட்', 'பிரோக்பேக் மவுண்டேன்', 'மான்ஸ்டர்ஸ் பால்' உட்பட பல படங்களில் நடித்தவர். 2008ல், 'ஐ அம் நாட் தியர்' மற்றும் 'தி டார்க் நைட்' படங்களில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார்.
2008, ஜனவரி 22ம் தேதி சோஹோ அபார்மெண்டில் உள்ள தனது வீட்டில் லெட்ஜர் மயக்கமடைந்து கிடந்தார். வீட்டு வேலைக்கார பெண் தெரெசா சாலமன் 911க்கு போன் செய்து உதவி கோரினார். மேலும் லெட்ஜரின் நெருங்கிய தோழியும் நடிகையுமான மேரி காதே ஒல்செனுக்கும் தெரெசா போன் செய்து தகவல் தெரிவித்தார்.
அதிகாலை 2.45 மணிக்கு மயக்கமடைந்த லெட்ஜர், உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால் 3.36 மணிக்கு உயிரிழந்தார். இன்சோம்னியா நோயால் அவதிப்பட்டு வந்த லெட்ஜர், பல மருந்துகளை சாப்பிட்டு வந்தார். மருந்துகளின் கலவை அவரது உடலில் விஷத்தன்மையை ஏற்படுத்தியதால் லெட்ஜர் உயிரிழந்ததாக மருத்துவ பரிசோதனை அறிக்கை தெரிவித்தது. ஹீத் லெட்ஜர் மரணமடையும் போது அவருக்கு வயது 28 என்பது குறிப்பிடத்தக்கது.
புரூஸ் லீ: உடல் வலிமைக்கு பெயர் பெற்றவரான புரூஸ் லீ, ஜீட் குங்க் டோ தற்காப்பு கலை பள்ளியை தொடங்கியவர். ஹாலிவுட் உட்பட மேற்கத்திய நாடுகளுக்கு தற்காப்பு கலையை கொண்டு சென்றவரும் அங்குள்ள மக்கள் மத்தியில் இக்கலையை கற்க ஆர்வத்தை தூண்டியவரும் இவரே.
தற்காப்பு கலையை மையமாக கொண்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த புரூஸ் லீ, உலகை உலுக்கும் வகையில் தனது 32வது வயதில் திடீரென மரணமடைந்தார். இவரது மரணத்துக்கு நிழல் உலகம் காரணம் என்றும் பில்லி சூனியம் காரணம் என்றும் கூறப்பட்டது. புரூஸ் லீயின் மரணம் கொலை என்றும் சந்தேகிக்கப்பட்டது.
1973, ஜூலை 20ம் தேதி தைவான் நாட்டு நடிகையும் புரூஸ் லீயுடன் 'கேம் ஆப் டெத்' படத்தில் இணைந்து நடிக்க இருந்தவருமான பெட்டி டிங்க் வீட்டில் திரைக்கதை ஆலோசனையில் இருந்த புரூஸ் லீக்கு தலைவலி ஏற்பட்டது. வலியை போக்க நடிகை ஒரு மாத்திரை கொடுத்தார். அதை சாப்பிட்ட புரூஸ் லீ தூக்கத்தில் ஆழ்ந்தார். ஆனால் அவர் மீண்டும் எழும்பவில்லை. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட புரூஸ் லீயை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். புரூஸ் லீ மரணத்தில் உள்ள மர்மம் இன்று வரை தெரியவரவில்லை.
ஜிமி ஹென்ட்ரிக்ஸ்: எலக்ட்ரிக் கிட்டாரை பயன்படுத்தி இசையில் புதிய புரட்சி செய்த இசையமைப்பாளர் ஜிமி ஹென்ட்ரிக்ஸ். தனது வாழ்நாளில், 'தி ஜிமி ஹென்ட்ரிக்ஸ் எக்ஸ்பிரீயன்ஸ்-ஆர் யூ எக்ஸ்பிரீயன்ஸ்ட்'(1967), 'ஆக்ஸ்சிஸ்-போல்ட் அண்ட் லவ்'(1967) மற்றும் 'எலக்ட்ரிக் லேடிலேண்ட்'(1968) ஆகிய 3 இசைத் தொகுப்புகளை மட்டுமே வெளியிட்டார். ஆனால் இந்த இசைத் தொகுப்புகளில் இவர் வடித்த இசை இன்றுவரை உலகம் முழுவதிலும் உள்ள கிட்டார் இசை கலைஞர்களை ஈர்த்து வருகிறது.
2003ம் ஆண்டு ரோலிங் ஸ்டோன் இதழ் வெளியிட்ட, பிரபல கிட்டார் இசை கலைஞர்கள் 100 பேர் கொண்ட பட்டியலில் ஜிமி ஹென்ட்ரிக்ஸ் முதலிடம் பிடித்தார்.
1970, செப்டம்பர் 18ம் தேதி ஒயினில் தூக்க மாத்திரை கலந்து குடித்த ஜிமி ஹென்ட்ரிக்ஸ், வாந்தி எடுத்த போது தொண்டையில் அடைப்பு ஏற்பட்டு மூச்சுதிணறி உயிரிழந்தார். ஆனால் இவரது மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து விரிவாக விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.
கார்ட் கோபைன்: 1990களில் தனது 'நிர்வாணா' இசை குழுவை கொண்டு ராக் இசைக்கு புத்துயிர் அளித்தவர் கார்ட் கோபைன். இவரது இசைத் தொகுப்பான 'நெவர்மைண்ட்' உலகம் முழுவதும் 26 மில்லியன் பிரதிகள் விற்பனையாகி புதிய சாதனை படைத்தது.
1994, ஏப்ரல் 8ம் தேதி, லேக் வாசிங்டன் பகுதியில் உள்ள தனது வீட்டில் கோபைன் பிணமாக கிடந்தார். மன அளுத்தம், சத்துணவு குறைபாடு, வயிற்று நோய், ஹெராயின் போதை பழக்கம் ஆகியவற்றால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கோபைன், தற்கொலை செய்து கொண்டதாக அவர் எழுதி வைத்திருந்த கடிதம் தெரிவித்தது.
தனது காதலி கோர்ட்னி லவ் மற்றும் இருவருக்கும் பிறந்த மகள் பிரான்சஸ் பீன் ஆகியோரை கோபைன் தனியாக விட்டு சென்றது உலகை உலுக்கியது.
ஜிம் மோரிசன்: பாப் இசை பாடகரான மோரிசன், 1967ம் ஆண்டு 'ஸ்டிரேஞ் டேஸ்' இசைத் தொகுப்பில் பாடிய 'வென் தி மியூசிக் இஸ் ஓவர், டர்ன் ஆப் தி லைட்ஸ்' என்ற பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது.
1971ம் ஆண்டு மார்ச் மாதம் பாரீஸ் நகருக்கு சென்ற மோரிசன், ஜூலை 3ம் தேதி அவர் தங்கியிருந்த வீட்டில் குளியலறையில் பிணமாக கிடந்ததை மோரிசனின் நீண்ட கால காதலி பமேளா கர்சன் தான் முதலில் பார்த்தார். உடல் பிரேத பரிசோதனை செய்யப்படாததால் மோரிசன் மரணம் குறித்து பல ஊகங்கள் வெளியாகின. மதுவில் போதை பொருள் கலந்து குடித்ததால் தான் மோரிசன் உயிரிழந்தார் என கூறப்பட்டது.
பாரீசில் உள்ள புகழ் பெற்ற பெரே லாசாய்ஸ் கல்லறை தோட்டத்தில் மோரிசன் அடக்கம் செய்யப்பட்டார். மரணத்துக்கு பிறகு மோரிசனையும் எல்வீஸ் பிரெஸ்லியையும் ஒன்றாக பார்த்ததாக பல கூறினர். இதில் முக்கியமானது என்னவென்றால், மோரிசன், ஜானிஸ் ஜோப்லின், ஜிமி ஹென்ரிக்ஸ், கார்ட் கோபைன் மற்றும் ரோலிங் ஸ்டோன் இதழ் நிறுவனர் பிரைன் ஜோன்ஸ் ஆகிய அனைவரும் 27 வயதில் மரணமடைந்தவர்கள்.
ஜியானி வெர்சாக்: உலக புகழ் பெற்ற பேஷன் டிசைனரான ஜியானி வெர்சாக், சைக்கோ கொலைகாரனான அன்ட்ரூ குனானன் வலையில் எதிர்பாராதவிதமாக சிக்கி மரணமடைந்தார்.
1997, ஜூலை 15ம் தேதி நியூ கஃபேவுக்கு நடந்து சென்று பத்திரிகை வாங்கிய பின் தனது மியாமி பீஸ் ஹவூஸ் பிளாடுக்கு திரும்பிக் கொண்டிருந்த ஜியானி வெர்சாகை, குனானன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். முகத்தில் ஒரு குண்டும் கழுத்தில் ஒரு குண்டும் பாய்ந்ததால், படிக்கட்டில் ஏறிக் கொண்டிருந்த வெர்சாக் உருண்டு கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். வெர்சாகை சுட்டுக் கொன்ற பின் குனானனும் அதே துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக் கொன்று தற்கொலை செய்தான்.
அலெக்ஸ்சாண்டர் மெக்குயின்: புகழ் பெற்ற டிசைனரான இவர், 4 முறை பிரிட்டீஸ் பேஷன் டிசைனர் விருதை வென்றவர். கிவென்ஷி நிறுவனத்தில் 5 ஆண்டுகள் தலைமை டிசைனரான பணியாற்றிய பிறகு சொந்த டிசைனிங் நிறுவனமான 'அலெக்ஸ்சாண்டர் மெக்குயின்'னை தொடங்கினார். இவரது 'மெக்கியூ' லேபில்கள் பிரபலமானவை.
'பம்ஸ்டர்ஸ்' பேஷன் ஷோவில் இவர் அறிமுகப்படுத்திய லோ-ரைஸ் மற்றும் அல்ட்ரா லோ-ரைஸ் ஜீன்ஸ்கள், 1990களில் பேஷன் டிசைனில் புது புரட்சியை ஏற்படுத்தியது. ரிஹன்னா, லேடி காகா உட்பட பல பிரபலங்கள் மெக்குயின் டிசைன் செய்த உடைகளை அணிந்து வலம் வந்தனர்.
புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த தனது தாய் ஜாய்சி(75) மரணமடைந்து 9 நாட்கள் கழித்து, அதாவது 2010, பிப்ரவரி 11ம் தேதி மெக்குயின் தற்கொலை செய்து கொண்டார். லண்டன் பேஷன் வாரம் தொடங்க சில நாட்களே எஞ்சி இருந்த நிலையில், மெக்குயின் மரணமடைந்தது பேஷன் உலகை உலுக்கியது. லண்டன், கிரீன் ஸ்டிரீட்டில் உள்ள தனது வீட்டில் மெக்குயின் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு அவர் எழுதிய கடிதத்தில் ''என்னுடைய நாயை நன்றாக கவனித்து கொள்ளுங்கள். சாரி, ஐ லவ் யூ, லீ" என குறிப்பிட்டிருந்தார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கோகைன், டிராங்குலைசர், தூக்க மாத்திரை ஆகியவற்றை மெக்குயின் சாப்பிட்டதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. தாய் இறந்த சோகத்தை தாங்கிக் கொள்ள முடியாத மெக்குயின், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
கிரிஸ் பெனோய்ட்: உலக மல்யுத்த கேளிக்கை(WWE)வீரரான கிரிஸ் பெனோய்ட், இரண்டு முறை சேம்பியன் பட்டம் வென்றவர். சேம்பியன் பட்டம் வென்றவருக்கு வழங்கப்படும் தங்க பெல்டை அணிந்து வரும் பெனோய்டை பார்த்து கோடிக் கணக்கான ரசிகர்கள் ஆர்ப்பரித்ததுண்டு.
2007, ஜூன் 25ம் தேதி பெனோய்ட் அவரது வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவருடன் அவரது மனைவி மற்றும் மகன் டானியல் ஆகியோரும் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர். முதலில் இது ஒரு நாடகம் என எண்ணிய ரசிகர்கள், பிறகு பெனோய்ட் உண்மையிலே உயிரிழந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. மனைவி மற்றும் மகனை கொலை செய்த பெனோய்ட் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என விசாரணையில் தெரியவந்தது. ஜூன் 22ம் தேதி மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து அவரது கை, கால்களை கட்டி போட்டு மூச்சு திணறடித்து கொலை செய்த பெனோய்ட், அடுத்த நாள் காலையில் மகனுக்கும் மயக்க மருந்து கொடுத்து வெட்டி கொலை செய்தார். பிறகு மூன்றாவது நாள் தூக்கு போட்டு பெனோய்ட் தற்கொலை செய்து கொண்டார். பெனோய்டின் இந்த முடிவுக்கு என்ன காரணம் என்பது இன்று வரை தெரியவரவில்லை. மனைவி மற்றும் மகனில் சடலங்களுக்கு அருகே கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளை வைத்திருந்த பெனோய்ட், வெயிட்லிப்டிங் எந்திரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.
ஸ்டீவ் இர்வின்: ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபலங்களில் ஒருவரான ஸ்டீபன் ராபர்ட் இர்வின், வனவிலங்கு நிபுணர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாவலர் ஆவார். 'தி கிரோகோடைல் ஹண்டர்' என அழைக்கப்படும் இவர், தனது மனைவி டெர்ரியுடன் இணைந்து தோன்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி உலக புகழ் பெற்றது.
குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள பீர்வாஹ் என்ற இடத்தில் இர்வின் பெற்றோர் தொடங்கிய 'ஆஸ்திரேலியா மிருகக்காட்சி சாலை'யையும் இர்வின்-டெர்ரி தம்பதியினர் பராமரித்து வந்தனர்.
2006, செப்டம்பர் 4ம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள கிரேட் பாரியர் ரீப் என்ற கடல் பகுதியில் மீன்களை படம் பிடித்துக் கொண்டிருந்த போது மார்பில், விஷத்தன்மை கொண்ட ஸ்டிங்கிரே பார்ப் என்ற மீன் குத்தியதால் இர்வின் அகால மரணமடைந்தார்.
செப்டம்பர் 9ம் தேதி இர்வினின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அன்று மாலை 'ஆஸ்திரேலியா மிருகக்காட்சி சாலை'யில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
உலகிலேயே, கேரள அரசுதான் முதன்முதலில் முதலை ஆராய்ச்சி மையம் ஒன்றுக்கு இர்வின் பெயரை சூட்டியது. இந்த ஆராய்ச்சி மையம் நெய்யாறு வனவிலங்கு சரணாலயத்தில் அமைந்துள்ளது.
-கே.வி. நிக்சன்.
Subscribe to:
Post Comments (Atom)
Nice post. usefull information
ReplyDelete