Monday, August 2, 2010

காத்திருக்கிறேன்...


இரவுகள் அனைத்தும்
விழி ஒளியில் கழிகின்றன
உன் நினைவலைகள்
கண் கரையை தாண்டுகிறது-கண்ணீராய்...

காற்றில் அசையும்
கூரை ஓலை சலசலப்பு
உன் சிரிப்பொலியை
என் காதுகளில் ரீங்காரமிடுகிறது-எதிரொலியாய்...

நாம் அமர்ந்து பேசிய
ஊரணி கரையும்
பெயர் எழுதி பால் வடித்த
கள்ளிச் செடியும், இன்று-உன் நினைவு சின்னங்களாய்...

வாங்கி வைத்த
மெட்டி இரண்டும், வளையல்களும்
சந்தன பொட்டு நிற
ஜரிகை சேலையும், இதயத்தை அரிக்குதடி-இரும்பு கறையானாய்...

பகைமையை பழக்கி
தடைகளை தகர்த்து
உன் கரம் பிடிப்பேன்-என
நீ உரைத்த சபதம்-எனக்கு சாபமாய்...

அமிலத்தில் குழைத்த அக்கினியாய்...எரிகிறேன்
நீ வரும் நாளுக்காக காத்திருக்கிறேன்...

-கே.வி. நிக்சன்.

No comments:

Post a Comment