சிரிப்பு மறைந்து குற்றவுணர்வு மேலோங்கியது; வழக்கும் விசாரணையும் நாடகமல்ல என்பதை முகமது அஜ்மல் கசாப் உணர்ந்தான்
தொடக்கத்தில் தன் மீதுள்ள வழக்கும் நீதிமன்ற விசாரணையும் ஒரு நாடகம் என எண்ணி நகைத்த, மும்பை தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தீவிரவாதி முகமது அஜ்மல் கசாப், தற்போது தான் செய்த குற்றத்தை உணர்ந்து வெட்கி தலைகுணிந்து தண்டனையை ஏற்க தயாராகிவிட்டான்.
மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் உயிருடன் பிடிபட்ட ஒரே தீவிரவாதி முகமது அஜ்மல் கசாப். 21 வயதான இவன் மீது பல்வேறு சட்டப்பிரிவின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கை ஆர்தர் ரோடு சிறை வளாகத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
ஏப்ரல் 15ம் தேதி. அன்றுதான் வழக்கு விசாரணை தொடங்கியது. ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் நானும் வழக்கு விசாரணையை கவணிக்க சென்றிருந்தேன். அதுநாள் வரைக்கும் பத்திரிகைகளில் மட்டுமே கசாப்பின் புகைப்படத்தை பார்த்து வந்த நான், முதல் முறையாக அவனை நேரில் பார்த்தேன். ஒரு டி-சர்ட், நீல நிற ஜீன்ஸ் அணிந்திருந்த கசாப், பக்கத்து வீட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்ததற்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறானோ என எண்ண தோன்றியது. அப்படி ஒரு பால் வடியும் முகம் அவனுக்கு.
பலரை சுட்டுக் கொன்ற பயங்கர தீவிரவாதி என்பதால் கசாப்பை, புல்லட் புரூப் ஜாக்கெட் மற்றும் ஹெல்மட் அணிந்திருந்த இரண்டு போலீஸ்காரர்கள் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்குள் அழைத்து வந்தனர். நீதிபதி எம்.எல்.தஹலியாணி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
அங்கிருந்த அனைவரது மத்தியிலும் ஒருவித நிசப்தம் நிலவ, நீதிமன்றத்துக்குள் நுழைந்த கசாப்பின் முகத்திலோ ஒருவித நகைப்பு தென்பட்டது. நீதிபதி, வழக்கறிஞர்கள், நீதிமன்ற அலுவலர்கள், போலீசார் மற்றும் பத்திரிகையாளர்களை பார்த்த கசாப்புக்கு நடப்பதெல்லாம் ஒரு நாடகம் போல தோன்றியிருக்கிறது. எப்படியும் தன்னை கொல்லப் போகிறார்கள் என்பதை அறிந்தும் அவனது முகத்தில் பயம் தென்படவில்லை.
''உன்னுடைய வழக்கறிஞர் யார்" என நீதிபதி கசாப்பிடம் கேட்க, அவனோ நீதிமன்றத்தில் அமர்ந்திருந்த ஒரு பெண் கிளார்க்கை நோக்கி கையை காட்டினான். நீதிபதி உடனே அவனது வழக்கறிஞரானா அஞ்சலி வாக்மாரேயை சுட்டிக் காட்ட, ''ஓ மறந்துவிட்டேன்" என்றான் கசாப். அவனது முகத்தில் சிரிப்பை தவிர வேறு எதுவும் இல்லை.
ஆனால் இந்த சிரிப்பு அவனுக்கு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. நாட்கள் செல்ல, விசாரணையின் போது சாட்சிகள் அவனை தீவிரவாதி என அடையாளம் காட்ட, கசாப் தான் செய்த குற்றத்தை உணரத் தொடங்கினான். அவன் சுட்டதில் குண்டடிப்பட்டு காயமடைந்து ஊனமான 10 வயது சிறுமி நீதிமன்றத்தில் ஆஜராகி கசாப்பை நோக்கி கையை காட்டி ''அவன்தான் என்னை சுட்டான்" என கூறிய போது கசாப் முகத்தில் மாற்றம் ஏற்பட்டது. சிரிப்பு மறைந்து குற்ற உணர்வு மேலோங்கியது. தான் ஒரு குற்றவாளி என்பதை அவன் அறியத் தொடங்கினான்.
அன்று தொடங்கி இன்று வரை ''என்னை தூக்கிலிடுங்கள்" என நீதிமன்றத்திடம் கசாப் கெஞ்கி வருகிறான். ஆனால் இந்திய நீதித்துறை எப்போதுமே அவசரப்படுவதில்லை. கசாப் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது......
-கே.வி. நிக்சன்.
No comments:
Post a Comment