அது காலை நேரம்
ஜன்னல் ஓரத்தில் நான்
சீராக விழுந்து கொண்டிருந்தது சாரல்...
மனதுக்குள் நினைவலைகள்
அன்று-இதே சாரல் காலத்தில்
ஜன்னல் ஓரத்தில் நான்-அருகில் நீ
இன்று-நான் தனிமையில்.
காலங்கள் ஓடுகின்றன...
நினைவுகளும் கூடவே ஓடுகின்றன
இதுதான் வாழ்க்கை
நான் எழுதிய கவிதை
பாதியில் முடிந்தது
தொடரும் என நினைத்த உறவு-அப்படியே
தொலைந்தது தெரியாமலேயே-தேடுகிறேன்.
என் மனம் கேட்கிறது
இனியும் ஒரு துணை தேவையா?
ஆம். அது முடிந்து போனது
இனி காதல் எனக்கு இல்லை.
கே.வி. நிக்சன்.
Monday, January 24, 2011
Thursday, January 20, 2011
பெரியவீட்டுக்காரர் என்ன சாதி?
கையடக்க எந்திரதை கொண்டு சவரம் செய்து கொண்டிருந்த பெரியவீட்டுக்காரரை வணங்கினேன். நான் கல்லூரி படிப்பை முடிக்க உதவி செய்த அவரை பார்த்து நன்றி சொல்லி வருமாறு தந்தை கூறியதால் அங்கு சென்றேன். பெரியவீட்டுக்காரர் என்ற பெயருக்கு பொருத்தமாக அவரது வீடும் பெரிதாக இருந்தது. அனைத்து வகையான ஆடம்பர வசதிகளும் அங்கு இருப்பதை என்னால் உணர முடிந்தது. 'வாப்பா படிப்பு முடிந்ததா?' என்றார். "நல்லபடியா முடிந்ததுங்க" என்றேன். அப்புறம் என்ன, வேலை? தொழிலா? என்றபடி என்னை வீட்டுக்குள் அழைத்து சென்றார். எதுவாக இருந்தாலும் நேர்மையானதா, நல்ல சம்பாத்திப்பதாக இருக்கனும் என்றேன். நேர்மையும் சம்பாத்தியமும் அவசியம்தான், ஆனால் அதவச்சி வசதியாக வாழ்னும், அதுதான் முக்கியம் என சொன்னவர், அவர் வீட்டில் இருந்த சாமி அறை முதல் கழிவறை முதல் எனக்கு சுற்றி காட்டினார்.
சாமி அறையில் பெரியவீட்டு அம்மா பூஜை செய்து கொண்டிருந்தார். சமையலறையில் வேலைக்கார பெண், மின்னணு பொருட்களின் உதவியோடு அலுப்பின்றி சமைத்துக் கொண்டிருந்தார். துணிகளை சலவை செய்ய எந்திரம், கழிவறையில் மேல்நாட்டு தொழில்நுட்பம், கேளிக்கை வசதிகளுடன் கூடிய தனி அறை, வரவு-செலவை கணக்கிட கணினி, நூலகம், வீட்டுக்கு வெளியே பச்சை புல்வெளியுடன் பல வகை, பழ வகை மரங்கள். வசதின்னா இப்படி இருக்கனும் என பெருமிதத்துடன் என்னை பார்த்து கூறினார். அவருக்கு நன்றி சொன்னேன். என் வீட்டுக்கு கிளம்பினேன்.
வழியில் எனக்குள் ஒரு குழப்பம். அறிவியல் உலகத்தில் இன்னுமா இது இருக்கிறது? விஞ்ஞானத்தை பயன்படுத்துகிறார்கள், ஏன் ஞானத்தை பயன்படுத்த தவறுகிறார்கள். எனக்குள் பல கேள்விகள், சமுதாயத்தை நினைத்து சில நெருடல்கள். வீட்டுக்கு வந்ததும் தந்தையை பார்த்து கேட்டேன் '' அப்பா, பெரியவீட்டுக்காரர் என்ன சாதி? சவரத்தொழிலாளியா, பூசாரியா, நலபாகரா, துப்புரவு தொழிலாளியா, கூத்தாடியா, பண்டிதரா அல்லது விவசாயியா? எல்லா தொழிலும் அவர் வீட்டுக்குள் இருக்கிறது, எல்லா தொழிலையும் அவரும் செய்கிறார். தொழில் அடிப்படையில்தானே சாதி உருவானது. அப்படின்னா பெரியவீட்டுக்காரர் என்ன சாதி?'' என் கேள்விக்கு தந்தை பதில் சொல்லவில்லை, அவருக்கு என் கேள்வி புரியவில்லை என நினைக்கிறேன். ஆனால் என் கேள்வியில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இந்த கேள்விக்கு அனைவரும் விடை தேட முயற்சித்தால், சாதிக்கு முடிவு கட்டிவிடலாம்...
-கே.வி. நிக்சன்.
Subscribe to:
Posts (Atom)